இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் சுப்மன் கில் 52 ரன்கள் எடுத்திருந்தார். அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த இந்த ஜடேஜா 50 ரன்கள் எடுத்திருந்தார்.
இதற்கு அடுத்ததாக முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தனர். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்திருந்தது. லெதம் 95 ரன்கள் அடித்திருந்தார்.
மற்றொரு துவக்க வீரர் யங் 89 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கு அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 49 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்திருந்தது.
51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தபோது, அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் சரிவிலிருந்து அணியை மீட்டனர். 32 ரன்களில் அஷ்வின் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் கடந்து 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த விருத்திமான் சஹா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 60 ரன்கள் அடித்தார். 234 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 283 ரன்கள் முன்னிலை பெற்றபோது டிக்ளேர் செய்தது. இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் லெதம் 56 ரன்கள் அடித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த சோமர்வில் 30 ரன்கள் கடந்து ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் விழுந்திருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் முடிய இன்னும் 9 ஓவர்கள் மீதமிருக்க நிச்சயம் இந்திய அணி ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்டபோது, ரச்சின் மற்றும் அஜாஸ் பட்டேல் இருவரும் விக்கெட் இழக்காமல் உறுதியாக நின்று போட்டியை டிரா செய்தனர்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஆட்டம் நூலிழையில் இந்திய அணியின் கையை விட்டுச் சென்றது. இரண்டாவது ஆட்டம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது.